Friday, March 6, 2009

http://www.liberation.fr

tamil translated version of the A very disturbing corpse
from http://liberation.fr thx to malaysiaindru.com




அல்தான்துயா கொலை பற்றிய பயங்கரமான விபரங்கள் -பிரஞ்ச் நாளிதழ் வெளியிட்டது

March 05, 2009, 11:16 pm மலேசியாஇன்று பிரிவு

மங்கோலியப் பெண் அல்தான்துயா 2006 ஆம் ஆண்டில் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்கு முன் நடந்த சம்பவங்களைத் துல்லியமாக ஒரு பிரஞ்ச் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது.

நிருபர் அர்நாட் டூபுஸ், அல்தான்துயா எப்படி கொல்லப்பட்டார் என்ப

தற்கான எழுத்துப்பூர்வமான சாட்சியத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காண ஆய்வை மேற்கொள்வதற்காக உலகத்தின் ஒரு பாதியைச் சுற்றி வந்துள்ளார் - கோலாலம்பூரிலிருந்து மங்கோலியா, அங்கிருந்து இறுதியாக பாரிஸ்.

மலேசியப் போலீஸ் வட்டாரத்திலிருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் அந்தப் பத்திரம் இரண்டு ஆண்டுகாலம் நீடித்த அல்தான்துயா கொலை வழக்கின் போது வெளியாக்கப்படவில்லை.

அவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு வழக்குரைஞர் அந்தப் பத்திரம் அப்பயங்கர கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் அளித்த எச்சரிக்கை செய்யப்பட்ட வாக்குமூலமாகும் என்று கூறினார். அது சம்பந்தப்பட்ட சட்டம் திருத்தப்பட்டுள்ளதால், அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் போய்விட்டது என்றார்.

அவரின் அறிக்கை “லிபரேசன்” என்ற இடதுசாரி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பத்திரம் அல்தான்துயா எப்படி கொல்லப்பட்டார் என்று “சோடிக்கப்படாத மற்றும் துல்லியமான” விபரங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அக்கொலை வழக்கு இன்னும் நடந்து கொண்டிருப்பதால் பல சட்டப் பிரச்னைகள் உருவாகக்கூடும் என்பதால் அப்பத்திரத்தில் காணப்படும் அனைத்து விபரங்களையும் மலேசியாகினி முமையாக வெளியிட முடியாத நிலையில் இருக்கிறது.

கடந்த மாதம், ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜாக்கி முகமட் யாசின், அல்தான்துயாவை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ்காரர் விசாரணையில் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்புக் கூறப்படும் என்று அறிவித்தார்.

டூபுஸ் வெளிக்கொணர்ந்த அந்த போலீஸ் பத்தரத்தில் அல்தான்துயா “சீனப் பெண்” என்று கூறப்பட்டிருப்பதாகவும், அவர் சுடப்படுவதற்குமுன் தன்னைக் கொல்லாமல் விட்டுவிடுமாறு கெஞ்சியாதகவும், தனக்கு குழந்தைகள் இருப்பதாகக் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அல்தான்துயாவின் முகத்தின் இடது பக்கத்தில் சுடப்பட்டதாகவும், அதன் பிறகு அவருடைய உடம்பிலிருந்து உடைகள் அகற்றப்பட்டு ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டதாகவும் அப்பத்தரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அப்பத்தரத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவருடைய கை இன்னும் அசைந்து கொண்டிருந்ததால் அவர் இன்னொரு முறை சுடப்பட்டார்.

பின்னர், அல்தான்துயா காட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் துண்டுதுண்டாக வெடிக்கப்படுவதற்குமுன் அவருடைய கால்கள், வயிற்றுப் பகுதி மற்றும் தலை ஆகியவற்றை சுற்றி வெடிமருந்துகள் கட்டப்பட்டன.

அந்தப் பத்தரம் அல்தான் துயாவைக் கொலை செய்தவர்கள் யார் யார் மற்றும் அக்கொலையில் அவர்களின் பங்கு என்ன என்பது பற்றி தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

மூன்று மாதகால ஆய்வு

இந்த வழக்கை மூன்று மாதகாலத்திற்கு ஆய்வு செய்ததாக டூபுஸ் மலேசியாகினியிடம் கூறினார்.

“இரண்டு வாரங்களை கோலாலம்பூரில் கழித்தேன். பின்னர் யுலான் பதோர் (மங்கோலியா) சென்று அங்கு ஒரு வாரம் இருந்தேன். அதன் பிறகு ஜனவரியில் பாரீஸ் சென்று அங்கு பத்து நாள்களைக் கழித்தேன்”, என்று ஓர் இமெயில் பேட்டியில் டூபுஸ் கூறினார்.

லிபரேசன் நாளிதழ் வெளியிட்ட அவரின் அறிக்கை பிரஞ்ச் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதில் அல்தான்துயாவிற்கும் அரசியல் ஆய்வாளர் அப்துக் ரசாக் பகிண்டாவிற்கும் இடையிலான உறவு மற்றும் மலேசிய அரசாங்கம் வாங்கிய பிரஞ்ச் நீர்மூழ்கிக் கப்பல் விபகாரத்தில் அவரின் பங்கு பற்றி எழுதியுள்ளார்.

மார்ச் மாதம் 2005 ஆம் ஆண்டில், அல்தான்துயாவும் (அப்துல் ரசாக்) பகிண்டாவும் ஐரோப்பாவிற்குச் சென்றனர். அங்கு பகிண்டாவின் சிவப்பு பெராரி காரில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பிரயாணம் செய்தனர். அப்போது அப்பழையக் கண்டத்தின் சொகுசான தங்கும் விடுதிகளில் தங்கினர்; மிகச் சிறந்த உணவகங்களின் விருந்துண்டனர்.”

“இப்பயணம் வெறும் சுற்றுப்பயணத்திற்கு மட்டுமல்ல: நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் 2002 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. ஆனால், இன்னும் சில முக்கியமான விசயங்கள் தீர்க்கப்பட வேண்டியிருந்தன”, என்று டூபுஸ் எழுதியுள்ளார்.

“ஆயுதங்கள் கொள்முதல் விவகாரங்களில், குறிப்பாக உயர்ந்த அளவிலானவைகளில், துணைப் பிரதமர் நஜிப் ரசாக் பகிண்டாவை நடுவராகப் பாவித்து வந்துள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும்”, என்று வட்டாரத் தற்காப்பு விவகார நிபுணர் ஒருவர் டூபுஸ்சிடம் கூறியுள்ளார்.

அல்தான்துயாவும் அப்துல் ரசாக்கும் மார்ச் 2005 இல் பாரிசில் இருந்த போது. அங்கு நஜிப்பைச் சந்தித்தனர் என்று அல்தான்துயாவின் உறவினர் கூறியிருப்பதையும் டூபுஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.

“2005 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் எடுக்கப்பட்ட ஒரு நிழற்படம் பாரிசிலுள்ள ஒரு தனியார் கிளப்பில் அவர்கள் மூவரும் இருப்பதைக் காட்டுகிறது,” என்று அவர் எழுதியிருக்கிறார். இது தான் அல்தான்துயாவைச் சந்தித்ததே இல்லை என்று நஜிப் கூறியிருப்பதை கேள்விக்குறியாக்குகிறது.

ஒரு பில்லியன் யூரோவுக்கு (ரிம4.7 பில்லியன்) மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை மலேசிய அரசாங்கம் பிரஞ்ச்-ஸ்பேனிஸ் நிறுவனமான அர்மாரிஸ்சிடமிருந்து வாங்கியது. அதற்காக அந்நிறுவனம் வழங்கிய “கமிசன்” தொகை கோலாலம்பூரிலுள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக அல்தான்துயாவிற்கு தெரிவிக்கப்பட்டதும் இக்கதை “மோதலாக மாறியது” என்று டூபுஸ் கூறுகிறார்.

அந்தக் கமிசன் தொகை 115 மில்லியன் யூரோ (ரிம541 மில்லியன்) அப்துல் ரசாக்கிற்குச் சொந்தமான பெரிமெகர் (Perimekar) என்ற நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.

“அந்தக் கமிசனில் அவருடையப் பங்கை அடைவதற்காக அல்தான்துயா கோலாலம்பூருக்கு விரைந்தார். அதில் அவருடையப் பங்கு அமெரிக்க வெள்ளி 500,000 என்று அவர் கூறினார்.

“இதற்கு முன்னே பகிண்டாவும் அந்தான்துயாவும் பிரிந்து விட்டனர். நடுங்கவைக்கும் வணிகரும் நஜிப்பின் மனைவியுமான, பொறாமைக்கார ரோஸ்மா மன்சூர், அல்தான்துயாவிற்கு எதுவும் கொடுக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.”

“இரு பெண்களுடன் அல்தான்துயா கோலாலம்பூர் வந்து சேர்ந்தார். அவ்விரு பெண்களில் ஒருவர் மந்திரம் செய்பவர். பகிண்டா கொடுக்க வேண்டிய கமிசனைக் கொடுக்காவிட்டால் பகிண்டாவை மந்திரத்தால் வசியம் செய்வது அவருடையப் பொறுப்பு.”

“பல நாள்களுக்கு அல்தான்துயா அவருடைய முன்னாள் காதலரை நச்சரித்தார். அக்டோபர் 18, அவருடைய வீட்டின்முன் அல்தான்துயா அரங்கேற்றிய காட்சிகளை பகிண்டாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை”, இவ்வாறு டூபுஸ் எழுதியிருக்கிறார்.

அதன் பின்னர், முக்கியமானவர்களுக்கு, நஜிப் உட்பட, பாதுகாப்பு வழங்கும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த இரு போலீஸ்காரர்கள் “அந்த சீனப் பெண்ணை செயலிழக்கச் செய்யுமாறு” கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

முழுத்திறமையுடன் செய்யப்பட்ட குற்றம் அல்ல

இது திறமையாகச் செய்யப்பட்ட குற்றம் அல்ல என்று டூபுஸ் கூறினார். அல்தான்துயா இரு போலீஸ்காரர்களால் அப்துல் ரசாக் வீட்டின்முன் கடத்தப்பட்டார்.

அல்தான்துயா ஒரு நாள் முழுவதற்கும் வாடகைக்கு அமர்த்தியிருந்த வாடகைக் கார் ஓட்டுனரின் கண்முன்னே அவருடைய பயணியின் வாடகை கொடுக்கப்படாமல் கடத்தப்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடத்தல்காரர்களின் கார் எண்ணை குறித்துக்கொண்டு போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்தார்.

போலீசார் அக்காரை உடனடியாக அடையாளம் கண்டனர்.

“அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட சம்பவங்களை துணைப் பிரதமர் நஜிப் ரசாக்கால்கூட நிறுத்த முடியவில்லை. அவர் அந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றார். பகிண்டா கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்குப் முன்பு, நஜிப் அவருக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினார்: ‘இன்று காலை மணி 11க்கு நான் இன்ஸ்பெக்டர் ஜெனரலைப் பார்க்கப் போகிறேன்…சிக்கல் தீர்க்கப்படும். அமைதியாக இருக்கவும்’.”

“சில மணி நேரங்களுக்குப் பிறகு பகிண்டாவும், அஜ்சிலா மற்றும் சிருல் ஆகிய இரு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.”

தொடக்கத்தில், அல்தான்துயாவைக் கொல்வதற்கு சதி செய்தாக அப்துல் ரசாக்மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் தன்னை தற்காத்து கொள்ள விவாதம் செய்ய அழைக்கப்படமலே விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கு இதில் தொடர்புபடுத்தப்பட்ட நஜிப்பிற்கு மட்டும் அவலத்தை உண்டுபண்ணவில்லை. அர்மரிஸ்
நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டில் வாங்கிய பிரஞ்ச் இராணுவ கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ்க்கும் (DCNS) அவலத்தை உண்டுபண்ணி உள்ளது என்று டூபுஸ் கூறுகிறார்.

பேங்காக்கைத் தளமாகக் கொண்டிருக்கும் இந்த 45 வயதான பிரஞ்ச் செய்தியாளர் தென்கிழக்கு ஆசியாவின் வரலாறு மற்றும் அரசியல் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இராணுவம் பற்றி அவர் எழுதிய புத்தகமும் அடங்கும்.

அவர் கூறியபடி, அவருடைய அடுத்த புத்தகம் அல்தான்துயா பற்றியதாக இருக்கலாம்.

No comments: